பெற்றோர் கண் முன்னே நேர்ந்த துயரம்: 6 தெருநாய்கள் கடித்துக் குதறியதில் ஒன்றரை வயது சிறுமி பரிதாப பலி!

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கே.ஹஞ் சிகலா முகாம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரது மனைவி நதாப். இந்த தம்பதிக்கு 1½ வயதில் அனம் என்ற மகள் இருந்தாள். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அனம் திடீரென்று கண் விழித்துள்ளது. வீட்டில் இருந்து வெளியே வந்த குழந்தை தனது வீட்டு முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அங்குள்ள கோழி இறைச்சி கடை அருகே நின்றிருந்த 6 தெருநாய்கள் குழந்தை அருகே ஓடி வந்தன. பின்னர் அந்த தெருநாய்கள் குழந்தையை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கியது.

பரிதாப சாவு
6 நாய்களும் குழந்தையை கடித்து குதறியது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்த குழந்தையை தெருநாய்கள் தரதரவென இழுத்து சென்றது. இதனால் வலிதாங்க முடியாமல் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் சத்தம் கேட்டு பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், குழந்தையை 6 நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கற்கள், உருட்டுக்கட்டையால் தெருநாய்களை விரட்டியடித்தனர்.

தெருநாய்கள் கடித்து குதறியதில் குழந்தை கழுத்து, மார்பு, முதுகு உள்பட உடல் முழுவதும் பலத்த காயங்கள் அடைந்திருந்தது. இதையடுத்து உடனே குழந்தையை பெற்றோர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தை அனமுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை ராய்ச்சூரில் உள்ள ரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை அனம் பரிதாபமாக உயிரிழந்தது.

Leave A Reply

Your email address will not be published.