நீதித்துறை மீதான நம்பகத்தன்மையால் ஜெனிவாவில் இலங்கைக்கு பேராபத்து! – அரசுக்குப் பீரிஸ் கடும் எச்சரிக்கை.

“உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல், நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசரப்படும் அரசின் போக்கு, இலங்கையின் நீதித்துறை மீதான சர்வதேச நம்பிக்கையைச் சீர்குலைத்து ஜெனிவாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எந்தவொரு ஜனநாயக நாடும் இத்தகைய அரசமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்தைக் கோரும். ஐக்கிய இராச்சியத்தில் இத்தகைய ஒரு விடயத்துக்காக 18 மாத காலத்துக்குள் 1,200 கருத்துக்கள் பெறப்பட்டன. ஆனால், எமது நாட்டில் அரசு எவ்வித வெளிப்படைத்தன்மையுமின்றி இதனைச் செய்கின்றது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகக் கூறி பதவிக்கால நீட்டிப்பைக் கோரும் அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நான்கு வீதம் வீதம் வெற்றிடங்களை ஏன் நிரப்பவில்லை? இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதன் மூலம் நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை அரசே சீர்குலைக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து விசேட விசாரணைப் பொறிமுறையை உருவாக்கியுள்ள நிலையில், உள்நாட்டு நீதித்துறை வலுவாக இருப்பதே நாட்டுக்குப் பலம். ஆனால், இன்று நீதித்துறை அப்பட்டமாக அரசியலாக்கப்படுவதால், அது சர்வதேச மட்டத்தில் நாட்டின் நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், இந்த விவகாரங்கள் இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். தனிநபர் நன்மைக்காக அல்லது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக முழு நாட்டையும் சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளுவது கண்டிக்கத்தக்கது.

சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் இந்தப் பதவிக்கால நீடிப்புக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள போதிலும், அரசு அவற்றைக் காது கொடுத்துக் கேட்கவில்லை.” – என்று அவர் குற்றம் சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.