செம்மணி மனிதப் புதைகுழியை இன்று நேரில் பார்வையிடுகின்றனர் ஐரோப்பிய தூதுவர்கள்! – சர்வதேச விசாரணை கோரி உறவுகள் கவனவீர்ப்புப் போராட்டம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழியை இன்று புதன்கிழமை நேரில் பார்வையிடவுள்ளனர்.
செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட அனுமதி கோரி, கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், அன்றைய தினமே நீதிமன்றமும் அதற்கான அனுமதியை வழங்கியது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை முற்பகல் 9 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் மற்றும் நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதுக்குழுத் தலைவர் திருமதி கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ், தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் செல்வி சாரா பொன்சேகா சில்வா ஆகிய 8 உறுப்பினர்கள் செம்மணி மனிதப் புதைகுழி தளத்தைப் பார்வையிடவுள்ளனர்.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட இன்று வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் செம்மணி வளைவுப் பகுதியில் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“போர் நிறைவுற்று பல வருடங்களாகியும் நீதி தரப்படாதிருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்துக்கும், தற்போது 450 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகலப்பட்டுள்ள செம்மணி மனிதப் புதைகுழி விடயத்துக்கும் உடனடியாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்.
தமிழ் இன அழிப்பின் சான்றாதாரமாக இருக்கின்ற இவ்விடயங்களை மூடிமறைத்து நீர்த்துப்போகச்செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன.
நீதி கோரி தொடர்ச்சியாகப் போராடிவரும் ஏமாற்றும் அரசின் கபட நாடகங்களுக்கு சர்வதேச சமூகம் ஏமார்ந்து போகக்கூட்டது.
அந்தவகையில் இன்று புதன்கிழமை காலை செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவுப் பகுதியில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்.
இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகும் இப்போரட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றோம்.” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
