எதிரணிகளை அடக்குவதை விட்டு குற்றங்களைக் கட்டுப்படுத்துங்கள்! – அரசிடம் நாமல் எம்.பி. வலியுறுத்து.

https://we.tl/t-eRFLCYU7D4XeiC2x

எதிர்க்கட்சியினரை முடக்குவதிலேயே அரசு பிரதான கவனம் செலுத்தி வருகின்றது என்றும், இதன் காரணமாகவே நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை விடுத்து, முறையான விசாரணைகளை நடத்துமாறு அரசிடம் வலியுறுத்திய அவர், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மறுசீரமைப்பு, நாட்டின் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் தற்போதைய அரசின் செயற்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். இதன்போதேபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்கால அரசியலுக்கு இளைஞர் தலைமுறையின் பங்களிப்பு மிக அவசியமானது என்று குறிப்பிட்ட அவர், அதற்கமைய தெய்வேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி மட்டத்தில் புதிய இளைஞர் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

கட்சியின் கொள்கைகளை நம்பும் இளைஞர்களை ஒருங்கிணைத்து, அடிமட்ட அளவில் ஒரு பலமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நீதித்துறை அரசியல் தலையீடுகளின்றி சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக உள்ளது என்று தெரிவித்த நாமல் எம்.பி., நீதித்துறை மற்றும் பொலிஸ் கட்டமைப்பை அரசு அரசியல்மயமாக்குவதைத் தடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எழுத்துபூர்வமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். அத்துடன், நீதிபதிகள் நியமனத்தில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பொலிஸாரைப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுவது குறித்தும் அவர் இதன்போது தனது கவலையை வெளியிட்டார்.

சர்வதேச ரீதியில் நாட்டிற்குப் பெரும் புகழைத் தேடித்தந்த தடகள வீரர் யுபுன் அபேகோன் குறித்துப் பேசிய அவர், அரசு கோடிக்கணக்கில் நிதி செலவழித்துப் பெற முடியாத உலகளாவிய கவனத்தையும் அங்கீகாரத்தையும் யுபுன் தனது திறமையால் நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்தார் என்று பாராட்டினார்.

விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும் முடிவு அவருடைய தனிப்பட்ட விடயம் என்ற போதிலும், எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பங்கேற்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் நாமல் எம்.பி. தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமது கட்சி ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மைப் பலம் உள்ளது என்பதற்காக அரசு செய்யும் தவறுகள் சரியாக மாறாது என்றும் சுட்டிக்காட்டினார்.

2029ஆம் ஆண்டு அரசியல் நகர்வுகள் குறித்து அந்தந்த காலகட்டங்களிலேயே தீர்மானிக்கப்படும் என்றும், தற்போதைய முதன்மை நோக்கம் மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதே ஆகும் என்றும் கூறி அவர் தனது ஊடக சந்திப்பை நிறைவு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.