அனுராதபுரம் – குருநாகல் வீதியில் கோர விபத்து காட்டு யானையுடன் வான் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயம்.
அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர துருலிய சேவன அருகில், காட்டு யானையுடன் வான் ஒன்று மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
பாதுக்கப் பகுதியில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென வீதியைக் கடந்து சென்ற காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பகுதியில் மனித – யானை மோதல் என்பது இன்று நேற்று உருவான பிரச்சினை அல்ல என்றும், கடந்த 18 வருடங்களாக இது தொடர்ந்தும் நீடித்து வருகின்றது என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனினும், இதற்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய அதிகாரிகள் நீண்ட காலமாக அசமந்தப் போக்கில் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்பு விவசாயத்தை முதன்மைக் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த இந்தப் பகுதி மக்கள், தொடரும் யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது விவசாயக் கைத்தொழிலைக் கூடக் கைவிடும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உயிரிழப்புக்களைத் தவிர்க்கும் வகையில் மனித – யானை மோதலுக்கு உடனடியாக விரைவான தீர்வை வழங்குமாறு கிராம மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
