யோஷித மீதான காணி அபகரிப்பு வழக்கு: விசாரணை ஆகஸ்ட் 20 இற்கு ஒத்திவைப்பு!
https://we.tl/t-XCHEofy6fB3fPiek
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய நீதிமன்ற அமர்வின்போது பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ ஆஜராகியிருக்கவில்லை. அவர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், யோஷித ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு காரணமாகவே அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல்போந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டார். அத்துடன், வழக்கு விசாரணையை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சட்டத்தரணியின் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் அந்த வழக்கில் சாட்சியமளிக்க வேண்டிய கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துச் சாட்சிகளையும் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நீதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.
தெஹிவளை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் 100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியைக் கொண்ட ஐந்து காணிகளைச் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
