நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு: அரசின் தீர்மானத்தை முற்றாக எதிர்க்க சட்டத்தரணிகள் சங்கம் ஏகோபித்த முடிவு.

இலங்கையிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு வருடங்களால் நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை முற்றாக எதிர்க்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் மிக முக்கிய விடயமாகும் என்றும், நீதித்துறை சார்ந்த பதவிகள் தொடர்பான அரசமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மேற்படி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக நாட்டின் சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான அரசின் யோசனைக்குக் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரம் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள பின்னணியில், இது பற்றி ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் நேற்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்குக் கொழும்பில் உள்ள சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.

இதன்போதே நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை முற்றாக எதிர்க்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ள
முக்கிய அம்சங்கள்

01. நீதித்துறையின் சுயாதீனத்தன்மை: இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது அரசமைப்பின் அடிப்படைத் தூணாகும். அத்தோடு, சட்டத்தின் ஆட்சி, அரசமைப்பு அடிப்படையிலான ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இது இன்றியமையாததாகும்.

02. கலந்தாலோசனையின்மை: இந்த யோசனை நீதித்துறை, சட்டத்தரணிகள் சமூகம், கல்வியியலாளர்கள், சிவில் சமூகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான கலந்தாலோசனைகள் இன்றியும், சுயாதீன மற்றும் அரசமைப்பு ரீதியிலான பரிசீலனைகள் இன்றியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

03. பரிந்துரைக்கப்படாத திருத்தம்: நீதி அமைச்சால் தயாரிக்கப்பட்ட ‘இலங்கையின் நீதித்துறை பற்றிய மதிப்பீடு மற்றும் மூலோபாய நடவடிக்கைத் திட்டம்’ ஊடாக பல்வேறு கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் அடையாளங்காணப்பட்டிருந்த போதிலும், அதில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்தல் ஒரு முக்கிய திருத்தமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை.

04. உண்மையான பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்துதல்: நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றுவதை விடுத்து, நீதிபதி வெற்றிடங்கள், வழக்கு விசாரணைகளில் தாமதம், போதிய வளமின்மை, தொழில்நுட்ப நவீனமயமாக்கல் இன்மை போன்ற உண்மையான பிரச்சினைகளுக்கே விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்தோடு, தற்போது நிலவும் நீதிபதி வெற்றிடங்கள் அரசமைப்புக்கு அமைவாக விரைவாக நிரப்பப்பட வேண்டும்.

05. வெளிப்படைத்தன்மையின் அவசியம்: நீதி நிலைநாட்டப்படல் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கையானது நீதித்துறையின் உண்மையான சுயாதீனத்துவத்தில் மாத்திரமன்றி, அந்த சுயாதீனத்துவம் வெளிப்படையாகப் புலப்படுவதிலும் தங்கியுள்ளது என்று அந்தத் தீர்மானத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.