அடுத்த இரண்டு வருடங்களில் டெங்குவை முற்றாக ஒழிக்க தேசிய திட்டம் அவசியம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தல்.

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் டெங்கு நோயை முழுமையாக ஒழிப்பதை இலக்காகக் கொண்டு, திட்டமிடப்பட்ட தேசிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதிக அவதானமிக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தற்போதைய டெங்கு நிலைமையை மீளாய்வு செய்வதற்கும், நுளம்பு கட்டுப்பாட்டு திட்டங்களை வலுப்படுத்துவதற்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முந்தைய டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளை அடையாளம் காணுதல், அதிக அவதானமிக்க பகுதிகளைக் கண்டறிதல், கூட்டு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தொழில்நுட்ப ஆதரவை விரிவுபடுத்துதல், சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு தொடர்பான மரணங்களைக் குறைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

அண்மை காலமாக டெங்கு மரணங்கள் குறைந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை எனக் குறிப்பிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையும் காலங்களிலும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டம் வரை கட்டமைக்கப்பட்ட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, டெங்கு அபாயம் தொடர்ந்தபோதிலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,300 இலிருந்து 350 முதல் 400 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.