மாவீரர் வாரத்தைக் கடைப்பிடிக்க இந்த ஆட்சியில் அனுமதி இல்லை  ராஜபக்ச அரசு திட்டவட்டம்.

மாவீரர் வாரத்தைக் கடைப்பிடிக்க
இந்த ஆட்சியில் அனுமதி இல்லை
ராஜபக்ச அரசு திட்டவட்டம்.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் மாவீரர் நாள் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தார். இந்த வாரம் (மாவீரர் வாரம்) பயங்கரவாதிகளை நினைவுகூரும் வாரம். இவர்களை நினைவுகூர கடந்த நல்லாட்சி அரசு நாட்டின் சட்டத்தை மீறி அனுமதி வழங்கியது என்பதற்காக எமது இந்த ஆட்சியில் பயங்கரவாதிகளை நினைவுகூர நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம்.”

– இவ்வாறு ராஜபக்ச அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதி கோரி தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்த முடியாது. அதற்கு அரசு தயார் நிலையிலும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாவீரர் தின நிகழ்வுகளைத் தடையின்றி நடத்துவதற்குத் தேவைப்பட்டால் ராஜபக்ச அரசுடன் பேசுவோம் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு. எமது நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பு. இந்தநிலையில், அந்த அமைப்பின் சார்பில் பலியானவர்களை எப்படி நினைவுகூர முடியும்?

நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டமும், கொரோனாத் தனிமைப்படுத்தல் சட்டமும் நடைமுறையில் இருக்கின்றபோது பொதுவெளியில் விடுதலைப்புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்தவே முடியாது.

அதை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மக்கள் விரும்பினால் போரில் உயிரிழந்தவர்களை தத்தமது வீடுகளிலிருந்து நினைவுகூரலாம். அதை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.