அருணாசலத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி; 5 ராணுவ வீரர்கள் மாயம்!
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளிகள் பலியாகியுள்ளனர்.
மேலும், ராணுவ முகாமில் இருந்து வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 ராணுவ வீரர்கள் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான கனமழை பெய்து வரும் நிலையில், திபாங் மாவட்டத்தில் உள்ள பாசு பானி ராணுவ முகாம் பகுதியில் நேற்று (ஆக. 15) மாலை ஏற்பட்ட வெள்ளத்தில் 2 ராணுவக் கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 ராணுவ வீரர்களில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 5 வீரர்கள் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான 5 வீரர்களை மீட்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர், மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் கியோஜாரிங் – பயாசிங் நெடுஞ்சாலைப் பகுதியில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளிகள் நிலச்சரிவில் சிக்கி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கி பலியான தொழிலாளிகளின் உடல்களை மீட்கும் பணியில் காவல் துறை, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
