அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் டொலர் பொருளாதார இலக்கு! – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவிப்பு.

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் லட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பாரம்பரிய கல்வி முறைமைகள் மனிதர்களின் கற்பனைத்திறனையும் சுய சிந்தனையையும் முடக்கியுள்ள நிலையில், தற்போதைய நவீன உலகம் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் புதிய கல்வி மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ளது.

முறையான கல்வி இல்லாத கால கட்டங்களிலேயே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாபெரும் கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன.

எனவே, தற்போதைய கல்வி முறைமையானது குழந்தைகள் புதிய விஷயங்களை ஆராயவும், இரக்க உணர்வுடன் சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் வழிவகுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது.” – என்றார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (புணூ) தொழில்நுட்பம் மனிதர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், 19ஆம் நூற்றாண்டில் போராடிப் பெற்ற 8 மணிநேர வேலைத் திட்டம், இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்வது நியாயமற்றது என்றார்.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உற்பத்தித்திறனை அதிகரித்து வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் மனிதர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி குறித்துக் குறிப்பிட்ட அவர், இலங்கை இனிவரும் காலங்களில் பிராந்தியத்தின் மாபெரும் உருமாற்றக் கதையாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

உள்நாட்டுத் தொழில்முனைவோர்கள் உள்ளூர் சந்தையை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலகளாவிய சிக்கல்களுக்குத் தீர்வு தரும் வணிக உத்திகளை உருவாக்க வேண்டும் எனவும், இலங்கை இளைஞர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.