ரணில் விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றார் அநுர! – காலி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித விமர்சனம்.

இலங்கை மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர அரசு, சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

காலி நகர மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கே அரசு முன்னுரிமை அளிக்கின்றது. இதற்குச் சட்டத்தரணிகள் சங்கங்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, புத்திஜீவிகள் மற்றும் அரசின் உள்ளகத் தரப்பினர் கூட எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் லால் காந்த போன்றவர்கள் கூறுவது போல் மாவட்ட செயலாளர்கள், நீதிபதிகள் மற்றும் ஆளுநர்களை அரசே தேர்ந்தெடுக்கும் கம்யூனிஸ்ட் நாடுகளின் ஆட்சி முறையைக் கொண்டுவரவே அநுர அரச தரப்பினர் முற்படுகின்றனர். இதன் மூலம் காலி மாநகர மற்றும் பிரதேச சபைகள் பெலவத்தையிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு நாடு தள்ளப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றார். ரணிலை விட அநுர வேகமாக சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நோக்கிச் செல்கின்றார். உலகில் எங்காவது ஒரு சோசலிச அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இயங்கியது உண்டா?” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.