22ஐ முழுமையான ஆயத்தின் முன் விசாரணை செய்ய மன்று மறுப்பு! ஐந்து நீதியரசர்கள் முன்னிலையிலே 67 மனுக்களும் தொடர்ந்து ஆராய்வு.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களையும் கொண்ட முமையான ஆயத்தின் முன்னிலையில் விசாரணை செய்ய வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களையும் கொண்ட முழுமையான ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அவருடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி, ஜெப்ரி அழகரத்னம், எராஜ் டி சில்வா, ஸ்ரீநாத் பெரேரா, அநுர மெத்தேகொட மற்றும் மைத்ரி குணரத்ன ஆகியோரும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசமைப்பின் 132 (3) உறுப்புரையின்படி, உயர்நீதிமன்ற அமர்வின் நீதியரசர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் பிரதம நீதியரசருக்கே உரித்தானது என்று வாதிட்டார்.

அனைத்துத் தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலிப்பதற்காக 15 நிமிடங்கள் விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், பின்னர் மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.

அதனையடுத்து, தற்போதைய ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்விலேயே மனுக்கள் மீதான விசாரணைகள் தொடரும் என்று பிரதம நீதியரசர் அறிவித்தார்.

22 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 67 மனுக்களும், நீதித்துறைச் சட்டமூலத்துக்கு எதிராக 5 மனுக்களும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.