22ஆவது திருத்தத்தால் ஜனநாயகம் சீரழிகின்றது! அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது!! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பகிரங்கக் குற்றச்சாட்டு.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்பட்டு, நீதித்துறை அவமதிக்கப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கட்சித் தலைமையகங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நியமனங்கள் வழங்கும் போக்கு உருவாகியுள்ளது என்றும், நாட்டின் பொருளாதாரம் மாத்திரமின்றி ஜனநாயகமும் சமூகமும் சுருங்கிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சிவில் அமைப்புகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சித் தலைமையகங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இளைஞர் சங்கங்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக்குழுக்களை நியமிப்பது போன்ற மக்கள் உரிமைகள் மீறப்படும் காலம் உருவாகியுள்ளது.

22ஆவது திருத்தத்தின் மூலமாக இந்த நிலை மேலும் தீவிரமடைந்து நீதி வழங்கும் செயல்முறையின் மீது செல்வாக்கு செலுத்தப்படுகின்றது.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் பேரிடர் காலங்களில் சிவில் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பிரதான பங்குதாரர்களாகச் செயற்படுகின்றன.

அரச இயந்திரத்தை விட மக்கள் அவற்றை அதிகமாக நம்புவதால், சர்வதேச தரத்துக்கு ஏற்ப முறைப்படுத்தல் நடக்க வேண்டுமே தவிர பலவந்தமாக அவற்றை முடக்கக் கூடாது.

முறையை மாற்றப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களைத் தமது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதோடு அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

தரமான விதை நெல், உரங்கள், கிருமிநாசினிகள் இன்றித் தவிப்பதோடு, யானை – மனித மோதல்களால் பாதிப்பு ஏற்படும் சூழலில் மேலதிகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவும் அரசு அனுமதி மறுத்து வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் நீதிபதிகளைப் பாதுகாத்தது. ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவியிலிருந்து நீக்கிய தரப்பு நாங்கள் அல்லர்.

மாகாண சபைத் தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தபோது அவர்களைத் தெரிவுக்குழுவுக்குக் கொண்டு செல்வதை எதிர்க்கட்சியாக நாமே எதிர்த்தோம்.

தற்சமயம் உருவாகியுள்ள எல் நினோ மற்றும் லா நினோ காலநிலை நிலைமைகளுக்கு அரசால் மாத்திரம் தீர்வு காண முடியாது என்பதால், சிவில் சமூகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கும் அவசியம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.