இந்தியாவில் இருந்து கடல்வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில்!
இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மணல் தீவுகளில் நின்ற 2 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் அடங்கலாக 11 பேரை மீட்டுத் தலைமன்னார் அழைத்து வந்து தலைமன்னார் பொலிஸாரிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட இந்த 11 பேரும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டு, நேற்று மன்னார் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, மீட்கப்பட்ட 11 பேரில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தலா 2 இலட்சம் ரூபா ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்னார் பதில் நீதிவான், அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்கும்போது கிராம சேவகர்களிடம் பதிவு செய்து, அதற்கான பதிவுகளை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார். அத்துடன், வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு மன்னார் பதில் நீதிவான் ஒத்திவைத்தார்.
