நான் போர்க் குற்றவாளி அல்லன்! – சர்வதேசத் தடைகள் எதற்காக என்றும் முன்னாள் இராணுவத் தளபதி கேள்வி.
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிப் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேசத் தடைகளையும் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா முற்றாக நிராகரித்துள்ளார்.
இந்தியாவை மையமாகக் கொண்ட ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி இராணுவ நடவடிக்கையின்போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு முப்படைகளும் தீவிரமாக முயன்றன என்றும், இலங்கைப் படைப் பிரிவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியாகவும் சட்டத்துக்குட்பட்டும் போரிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் பிரித்தானியாவால் தனக்குத் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ள அவர், “இந்த தடைகள் எதற்காக? நான் என்ன தவறு செய்தேன்? நான் போர்க் குற்றவாளி அல்லன், எனது நாட்டுக்காகவும் மக்களுக்காகவுமே போரிட்டேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
