எயார்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் விசாரணை: முன்னாள் சபாநாயகர் சமல் ஆஜராகி வாக்குமூலம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கான எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ச இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜாராகியுள்ளார்.

இந்த விமானக் கொள்வனவு இடம்பெற்ற காலப்பகுதியில் நிலவிய சூழ்நிலைகள் மற்றும் அதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஆணைக்குழு அதிகாரிகள் அவரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ள ‘எயார்பஸ் ஊழல்’ விவகாரம் தொடர்பில் இலங்கையில் மீண்டும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அக்காலப்பகுதியில் அமைச்சரவையில் பதவி வகித்த அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தொடர்ச்சியாக வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றது.

இதற்கிடையில், அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இந்த வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவின் கைது, அந்தப் பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டது என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்துத் தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.