அனுராதபுரப் பேரணியில் பங்கேற்பது குறித்து கட்சியின் அரசியல் குழுவுடன் பேசி இறுதி முடிவு – தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் தெரிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அனுராதபுரத்தில் நடத்தப்படவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில், கட்சியின் அரசியல் குழுவுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையில் நேற்று வியாழக்கிழமை தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் விசேட சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் பங்கேற்குமாறு எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் அரசியல் குழு கூடி ஆராய்ந்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை காலை எமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்போம்.

இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் அரசியல் ரீதியாக ஒன்றிணைவதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக, அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்தே தற்போது கலந்துரையாடப்படுகின்றது.

கடந்த கால நல்ல விடயங்களை முன்னெடுத்துச் செல்லும்போது, கடந்த காலத் தவறுகளை மீண்டும் தொடரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். அரசியல் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை.

தேர்தலொன்றுக்கான அறிகுறியே இல்லாத நிலையில் அரசியல் கூட்டங்கள் நடத்தப்படுவதாக விமர்சிப்பவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமே கேள்வி எழுப்ப வேண்டும். மக்கள் ஜனாதிபதியைத் தெரிவு செய்வது கூட்டங்களை நடத்துவதற்காகவன்றி, நாட்டை முன்னேற்றுவதற்காகவே ஆகும்.” – என்றார்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், நீதித்துறையின் சுயாதீனம் மிக முக்கியமானது எனவும், ஒரு நீதிபதி தனது மனச்சுதந்திரத்துடன் சுயாதீனமாகத் தீர்ப்பளிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமன்றி அனைத்து நாட்டு மக்களுக்கும் முக்கியமான பிரச்சினை என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.