நகரின் வளர்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி பருத்தித்துறையில் பெரும் போராட்டம்!

யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டன.

பருத்தித்துறை நகர பிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர், ஓட்டோ சேவைச் சங்கத்தினர், மீன் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்றிருந்தனர்.

இந்தப் போராட்டத்துக்குத் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களைத் தவிர, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேச்சை (ஊசி) குழு ஆகியன முழுமையான ஆதரவை வழங்கியிருந்தன.

பருத்தித்துறை நகர் மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும், பருத்தித்துறை அஞ்சல் நிலையத்துக்குச் சொந்தமான இடத்தை விடுவிக்க வேண்டும் மற்றும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற வளாக இடமாற்றத்துக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டதுடன் “எமது நிலம் எமக்கே வேண்டும், இராணுவமே வெளியேறு” போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துறைமுகப் பகுதியிலிருந்து பேரணியாகச் சென்று பிரதேச செயலகம் வரை சென்றனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ முகாம்களை அகற்றி நகரின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமாறு கோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கான மகஜர் நகர பிதா வி.டக்ளஸ் போலினால் பிரதேச செயலாளர் ந.திருலிங்கநதனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்த மகஜரின் பிரதிகள் பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பருத்தித்துறை நகர் பகுதி வர்த்தகர்களும் மரக்கறி வியாபாரிகளும் இன்று காலை 10 மணி வரை தமது கடைகளை அடைத்து பேரணியிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.