களுத்துறையில் ரயில் மோதி இரு பெண்கள் பரிதாபப் பலி!
களுத்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் தாயும் அவரது உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம் புனித நகரத்தில் நடைபெறவுள்ள மத நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மதுகம பகுதியிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் உறவுக்கார மகள் ஆகியோர் களுத்துறை தெற்கு ரயில் நிலையத்துக்கு அருகில் வந்துள்ளனர்.
அனுராதபுரம் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக, ரயில் நிலையத்தின் வலது பக்க நடைமேடைக்குச் செல்வதற்காக இவர்கள் ரயில் பாதையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் மோதியதிலேயே இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் தாயும் உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று களுத்துறை ரயில் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரயில் பாதையின் வழியே கவனக்குறைவாக நடந்து சென்றமையே இத்தகைய விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் களுத்துறை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
