அநுராதபுரம் வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சைத் தொகுதி – நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில், இலவச சுகாதாரச் சேவையை மக்களுக்கு நெருக்கமாக்குதல், அதிநவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான முகாமைத்துவத்தை ஸ்தாபித்தல் ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடை பெற்றது.

இந்த நிகழ்வில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் கடன் உதவியின் கீழ் 3 ஆயிரத்து 545 மில்லியன் ரூபா நிர்மாணச் செலவு மற்றும் உபகரணங்களுடன் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரத்து 35 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதிநவீன இருதய தீவிர சிகிச்சைப் பிரிவுகள், கெதீட்டர் பரிசோதனைக் கூடங்கள், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. வசதிகள், வாட்டுத் தொகுதிகள், ஆய்வுகூடங்கள் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் சேர்த்து, 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மேம்பாட்டுக்காகச் சுமார் 34 ஆயிரத்து மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை 18 மாதங்களுக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி, தற்போது நாடு ஸ்திரமான பொருளாதார நிலையை எட்டியுள்ளது. சுகாதாரத் துறையின் மனித வளத்தை மேம்படுத்தும் முகமாக, வரலாற்றில் முதன்முறையாக குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.” – என்றார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உரையாற்றும்போது, நாட்டின் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன என்றும், குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அவசர நிலைகளை எதிர்கொள்ள இத்தகைய நவீன சிகிச்சைத் தொகுதிகள் மிக அவசியமானவை என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் உரையாற்றும்போது, இலங்கையின் நீண்டகால மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளியாகத் திகழ்வதில் ஜப்பான் பெருமை கொள்கின்றது என்றும், இருதய நோய்களால் ஏற்படும் இறப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானின் அனுபவத்தையும் பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கை அலுவலகப் பிரதிநிதி மற்றும் வைத்தியசாலைப் பணிக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.