மன்னார் பொது மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்றுப் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து நவீன வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இந்தப் பிரிவின் நிர்மாணப் பணிகள் 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளன.

இதன்மூலம் மன்னார் மக்கள் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்லாமலேயே அவசர விபத்துகள் மற்றும் நிபுணத்துவ சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் கடந்த இரு வருடங்களில் சுகாதாரத் துறையில் 600 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்தியா இலங்கையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை ஒரு குடும்ப உறுப்பினருக்கான கடமையாகக் கருதுவதாகத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை வளமான நாட்டை நோக்கிப் பயணிப்பதைக் பாராட்டியதுடன், தொடர்ந்தும் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவர்களுக்காக 243 மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளைக் கொண்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் 230 மில்லியன் ரூபாயில் புதிய சிறுவர்கள் பிரிவு என்பன நிர்மாணிக்கப்படவுள்ளன.

250 மில்லியன் ரூபா பெறுமதியான சி.ரி. இயந்திரம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புதிய பயிற்சி பெறும் வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், தாதியர்கள் மற்றும் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கான நியமனங்களும் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அடிகளார், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.