கிளிநொச்சியில் வாள்வெட்டுக் குழுக்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக வர்த்தகர்கள் நேற்று பெரும் கவனவீர்ப்புப் போராட்டம்.

கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் வாள்வெட்டுக் குழுக்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, நேற்று வெள்ளிக்கிழமை மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர் சங்கம் மற்றும் கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்புப் பேரணி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று, மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ்ஜிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்களால் கையளிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து, வர்த்தகர்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தின் நோக்கங்கள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

இதில் கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர் சங்கத்தின் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம் உட்பட வர்த்தக சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.