உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 220 வருடக் கடூழியச் சிறை – 9 பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை.
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் 15 குற்றவாளிகளுக்குத் தலா 220 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 15 குற்றவாளிகளுக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் நேற்று முதல் அரசுடமையாக்கப்படுகின்றது என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர ‘ட்ரயல் அட் பார்’ அமர்வு தீர்ப்பளித்துள்ளது
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்தமையுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை தொடர்பில் 24 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என்று நேற்று நிரூபிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
24 பேர் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர ‘ட்ரயல் அட் பார்’ அமர்வு நேற்று இரவு வழங்கியுள்ளது.
தாக்குதல்களுக்குச் சதி செய்தமை, அதற்கு உடந்தையாக இருந்தமை, இனவாதக் கருத்துகளைப் பரப்பியமை உள்ளிட்ட 23 ஆயிரத்து 270 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் 8 ஆயிரத்து 900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 9 பேர் குற்றச்சாட்டுக்களில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் 15 பேருக்கும் 220 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் முக்கிய கூட்டாளியாகப் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட நௌபர் மௌலவியும் தண்டனை பெற்றவர்களில் அடங்குகின்றார்.
நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளாக
நிரூபிக்கப்பட்டவர்கள்
விவரம் வருமாறு:-
1. முகம்மது இப்ராஹிம் முகம்மது நெளபர் (நௌபர் மௌலவி) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
2. முகம்மது சரிபு ஆதம் லெப்பை (அபு ஹாத்விக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
3. ஹயாத்து முகம்மது அஹமட் மில்ஹான் (அபு சில்லா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
4. முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
5. முகம்மது இப்ராஹிம் அப்துல் ஹக் (அபு பலா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
6. முகம்மது அன்வர் முகம்மது ரிஸ்கான் (அபு தாரிக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
7. முகம்மது மன்சூர் முகம்மது சனாஸ்தீன் (அபு மிசான்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
8. அப்துல் மனாப் முகம்மது பிரிதௌஸ் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
9. முகம்மது ரமீஷ் முகம்மது சாரிக்/ சாஜித் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
10. ஹுஸைனுல் ரிஸ்வி முகம்மது காஹிர் சமீர் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
11. முகம்மது ஹனீபா சைனுல் ஆப்தீன் (அபு ஹினா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
12. முகம்மது முஸ்தபா முகம்மது ஹாரிஸ் (அபு நன்ஜியார்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
13. ராசிக் ராஸா ஹுஸைன் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
14. கச்சி முகம்மது ஜஸ்மின் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
15. அப்துல் லதீப் முகம்மது சாப்பி (சாப்பி மௌலவி / அபு புர்கான்) – ஒரு குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு. ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி
குற்றமற்றவர்கள் என்று
விடுவிக்கப்பட்டவர்கள் (9 பேர்):-
1. முகம்மது சஹீர் முகம்மது ஹசன் (அபு தாவூத்)
2. முகம்மது இப்திகார் முகம்மது இன்சாப் (அபு முகம்மது)
3. ரஷீத் முகம்மது இப்ராஹிம்
4. சைனுல் ஆப்தீன் முகம்மது ஜசீம்
5. முகம்மது முஸ்தபா முகம்மது ரிஸ்வான்
6. மீரா சாஹிப் முகம்மது நப்கி (அபு சனா)
7. முகம்மது அமீர் முகம்மது அயாத்துல்லா
8. முகம்மது அன்சார்தீன் முகம்மது இல்மி
9. முகம்மது அக்ரம் அஹக்கம்
தீர்ப்பு அறிவிப்பை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி நேற்றுப் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்கள் மற்றும் நடமாடும் சி.சி.ரி.வி. வாகனங்கள் அடங்கிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
