நாவற்பழம் விற்ற பத்து வயதுச் சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபப் பலி! – கிளிநொச்சியில் சோகம்.
கிளிநொச்சி – பரந்தன் பூநகரி பிரதான வீதியில், குடமுருட்டி பகுதியில் நாவற்பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, உருத்திரபுரம் – எள்ளுக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய நிரோசன் லக்சன் என்ற சிறுவனே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நாவற்பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மேற்படி சிறுவன், இன்று வியாழக்கிழமை பரந்தன் – பூநகரி பிரதான வீதியைக் கடக்க முற்பட்டவேளை, பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
