நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கறுப்பு நாள்.

https://we.tl/t-rHstkPt18A5Cmtkh

நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்க மன்றத்தின் அதிகாரமும் தேசிய மக்கள் வசம் உள்ள நிலையில், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகம் முற்றாக அழிக்கப்பட்டு நீதித்துறையின் சுயாதீனம் சீர்குலைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி., இன்றைய தினத்தை நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் எனக் குறிப்பிட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிறைவேற்றுத்துறை அல்லது சட்டவாக்க மன்றத்தால் தவறுகள் இழைக்கப்படும்போது பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறும் சூழல் முன்னர் இருந்தது. ஆனால் தற்போதைய அரசின் செயற்பாடுகளால் மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்வது குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் பரிசீலிக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன.

அரசு தனது சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதற்காக நீதிமன்றத்தை அரசியல்மயமாக்கியுள்ளது.

இந்த 22ஆவது திருத்தத்துக்கு நாட்டின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பொறியியலாளர்கள் மற்றும் பெருமளவிலான தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டுத் தூதர்களும் கொமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் இந்த திருத்தத்தின் ஆபத்தான தன்மையைச் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அரசில் உள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் மட்டுமே இதற்கு ஆதரவாக உள்ளனர் .

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டுதலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றன.

அரசின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய போராட்டம் முற்றிலும் ஜனநாயக வழியிலானது. ஒழுக்கமும் ஜனநாயகப் பண்பும் கொண்ட எமது கட்சி எப்போதும் சட்டவிரோதமாகச் செயற்படாது.

கிராமப்புறங்களில் உள்ள பாதுகாப்புச் குழுக்கள் மற்றும் விவசாய அமைப்புகளுக்குள் ஆளுங்கட்சியினர் ஊடுருவி அரசியலைப் புகுத்த முற்படுகின்றனர்.

நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

மேலும், எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து ஜனநாயகப் போராட்டம் தொடரும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.