கைது பயத்தால் அரசு மீது எதிரணிகள் குற்றச்சாட்டு! – சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க எதிர்காலத்தில் மேலும் பல சட்டங்கள் இயற்றப்படும் என்கின்றார் அமைச்சர்.

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்றுத்துறை நீதித்துறை அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருகின்றது.

வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுத் குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை நிறைவேற்றும் போது எதிர்க்கட்சியினர் அதற்கு எதிராகச் செயற்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

காலம் காலமாக வழக்குகள் நிலுவையிலேயே இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் விரும்புகின்றனர். அவ்வாறு இருந்தால் மட்டுமே தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என அவர்கள் நம்புகின்றனர். அவர்களின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக மக்களின் எதிர்பார்ப்புகளை அரசு ஒருபோதும் கைவிடாது.

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைச் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம். பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் போது பல அரசியல்வாதிகளின் பெயர்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையால்தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலக்கமடைந்து இவ்வாறான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

22ஆவது திருத்தம் ஊடாக நீதித்துறை அதிகாரத்தை நிறைவேற்றுத்துறை கைப்பற்ற முயல்வதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது. எம்மிடம் இருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட நாம் தவறாகப் பயன்படுத்துவதில்லை. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் நோக்கம் அரசுக்குச் சிறிதும் இல்லை.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாகவும், ஜனநாயகம் மற்றும் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவும் எதிர்காலத்தில் மேலும் பல அவசியமான சட்டங்கள் இயற்றப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.