திருநெல்வேலிச் சந்தையில் பட்டப்பகலில் கத்திக்குத்து! – இருவர் படுகாயம்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலிச் சந்தையில் வேலை செய்யும் இரு இளைஞர்களுக்கு இடையே திடீரென முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்வார்த்தை முற்றிய நிலையில், ஒரு இளைஞர் மற்றையவர் மீது சரமாரியாகக் கத்திக் குத்துத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இளைஞர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து கிடந்த போதிலும், அச்சம் காரணமாக அங்கிருந்த எவரும் அவரை மீட்க முன்வரவில்லை.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கோப்பாய் பொலிஸார் உடனடியாக விரைந்து சென்று, காயமடைந்து கிடந்த இளைஞரை மீட்டு உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், தாக்குதலை நடத்திய மற்றைய இளைஞர் சம்பவ இடத்துக்கு அருகிலேயே நின்றுகொண்டிருந்த நிலையில், பொலிஸார் வருகின்றமையைக் கண்டு தானும் தன் மீது கத்தியால் குத்திக் கொண்டு காயப்படுத்திக் கொண்டுள்ளார்.

காயமடைந்த இருவரும் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.