இலட்சக்கணக்கான பக்தர்களை வரவழைத்து வங்கக் கடலில் தீர்த்தமாடிய வல்லிபுரம் ஆழ்வார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா நேற்று சனிக்கிழமை மாலை கற்கோவளம் வங்கக்கடலில் மிகவும் விமரிசையாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகளைத் தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமி சகிதம் பிள்ளையார், வல்லிபுரம் ஆழ்வார் மற்றும் இலட்சுமி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரங்களுடன் வங்கக்கடல் நோக்கி பவனியாக எழுந்தருளிச் சென்றார்கள்.
கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் சுவாமிகள் அமர்ந்திருக்க, அங்கு விசேட வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, கற்கோவளம் வங்கக்கடலில் சமுத்திரத் தீர்த்த உற்சவம் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
தீர்த்த உற்சவம் நிறைவு பெற்றதும், அருள்பாலிக்கும் சுவாமிகள் மீண்டும் பக்தர்களின் அரவணைப்போடு ஆலயத்தை நோக்கித் திரும்பினார்கள்.
வரலாற்றுப் புகழ்பெற்ற இந்தச் சமுத்திரத் தீர்த்த உற்சவத்தில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வல்லிபுரம் ஆழ்வாரின் அருள் பெற்றுச் சென்றனர்.










