வடக்கு, கிழக்கு காணிப் பிரச்சினைகளுக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு காண நடவடிக்கை – அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவிப்பு.

“போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜி.பி.எஸ். முறைமையிலான அளவீட்டுப் படங்கள் ஊடாகக் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டபோது, மக்களின் சொந்தக் காணிகளும் அரச காணிகள் என்ற கட்டமைப்புக்குள் தவறுதலாக உள்வாங்கப்பட்டிருக்கலாம். அவற்றை மீளாய்வு செய்து விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” – என்று சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் தனியார் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களமும் வனவளத்துறை திணைக்களமும் ஆக்கிரமித்துள்ளன என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரான காலகட்டங்களிலும் வடக்கு, கிழக்கு மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து சென்றமையால், அவர்கள் வாழ்ந்த வீடுகளும் விவசாய நிலங்களும் பிற்காலத்தில் காடாகிப் போயுள்ளன.

போருக்குப் பின்னர் ஜி.பி.எஸ். முறைமையின் மூலம் காணிகள் அளவிடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டபோது, பொதுமக்களின் காணிகளும் அரச காணிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கலாம். ஏன், அரச வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்குரிய காணிகள் கூட வனவளத்துறை திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே, மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்க முடியாது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை அங்கீகாரத்துடன் உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது தாமதமாயினும், அது எதிர்வரும் மாதமளவில் சமர்ப்பிக்கப்படும்.

தவறான அளவீடுகள் காரணமாகத் தனியாருக்குச் சொந்தமான காணிகள் வனவள அல்லது வனஜீவராசிகள் திணைக்களங்களுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தால், அவற்றை மீளாய்வு செய்து விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஒருவேளை சம்பந்தப்பட்ட காணிகளை அவ்வாறு விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அந்தக் காணிகளுக்குப் பதிலாக மாற்றுக்காணிகளோ அல்லது உரிய நிவாரணமோ வழங்கப்படும்.

காணி தொடர்பான இந்தப் பணியை இந்த ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்யவே அரசு எதிர்பார்க்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதும் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், இயற்கை வாழிடங்களைப் பாதுகாத்துக்கொண்டே இந்தக் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பும் உள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.