தமிழரசுக் கட்சியைக் களங்கப்படுத்த திட்டமிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது சி.வி.கே. சிவஞானம் கடும் குற்றச்சாட்டு.
தியாக தீபம் திலீபனின் சிலைக்கு எதிரான ஓர் ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சித்தரிப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திட்டமிட்ட செயலாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார். இது தன் மீது மட்டுமல்ல, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் திட்டமிட்டுக் களங்கப்படுத்துகின்ற செயல் என்றும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“நானும் தமிழரசுக் கட்சியும் இந்தச் சிலை வைப்புக்கு எதிரானவர்கள் என்றும், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் துணைபோனோம் அல்லது எங்கள் கோரிக்கைக்கு அமையவே பொலிஸார் நடவடிக்கை எடுத்தார்கள் என்றும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
திலீபனின் சிலையைப் பொலிஸார் எடுத்ததற்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. பொலிஸார் யாழ். மாநகர மேயரிடம் நீங்கள் சிலையை அகற்றுவீர்களா எனக் கேட்டபோது, மாநகர மேயர் நாங்கள் அகற்றமாட்டோம் என்றே தெரிவித்தார். நாங்கள் சொல்லி பொலிஸ் செய்யுமா? அவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் நாங்கள் என்றால், எங்கள் கட்சிக்கு எதிராகப் பல வழக்குகள் போடப்பட்டுள்ளதே, அவற்றை எங்களால் தடுத்திருக்கலாமே? இது முற்றிலும் சாத்தியமற்றது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் தூபியைச் சுற்றிப் பாதுகாப்பு வேலி அமைத்து, 10 அடி சுற்றளவுக்கு அதனைத் திருத்தி அமைக்கலாம் என்ற கோரிக்கையை நான்தான் அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வைத்தேன். அப்படிப்பட்ட ஒருவன் இந்தச் சிலை வைப்பை எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை. எமது கட்சியும் எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு நாங்கள் மாறானவர்கள் என்று சித்தரிப்பது நியாயத்துக்கு அப்பாற்பட்டது.
மேலும், 2015ஆம் ஆண்டில் முதலாவதாக அந்த இடத்தைத் துப்புரவு செய்து நிகழ்வை நடத்தியது ஜனநாயகப் போராளிகள் கட்சியாகும். 2016ஆம் ஆண்டிலும் அவர்கள்தான் செய்தனர். அவர்களுக்கு அந்த உதவியைச் செய்தவன் நான்தான். ஆனால், இன்று தமிழரசுக் கட்சியை அழிப்பதே தங்களது நோக்கம் என்று கூறிக்கொண்டு, திலீபன் நினைவேந்தலையும் தங்களது சுயநல அரசியலுக்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பயன்படுத்தி வருகின்றது.
திலீபன் தியாக வேள்வியில் ஆகுதியானவன் என்பது எல்லோருக்கும் தெரியும்; அவரைக் கொண்டாடுவது அனைவருக்கும் திருப்தியான விடயம். ஆனால், தாங்கள்தான் எல்லாம் செய்யலாம், தங்களது கட்சிதான் அதற்கு ஏகபோகக் குத்தகைதாரர்கள், தாங்கள்தான் ‘புலி வாரிசுகள்’ என்றெல்லாம் மற்றவர்களைச் சித்தரிக்க முடியாது. தாமாகவே பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு திலீபன் நினைவஞ்சலிக் குழுவே அங்குள்ளது. அதில் தமிழரசுக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற ஏனைய தமிழ்க் கட்சிகள் இடம்பெறவில்லையே ஏன்?
2015, 2016, 2017 காலப்பகுதிகளில் இந்த நிகழ்வுகளை முன்னெடுத்த ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட இன்று அந்த இடத்துக்கு வரவில்லை. உங்களோடு முரண்படக் கூடாது என்பதற்காகவும், திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவுமே நாங்கள் ஒதுங்கிப் போய், ‘நீங்களே செய்யுங்கள்’ என்று விட்டுவிட்டோம். ஆனால், அதையே சாதகமாகப் பயன்படுத்தி எங்களை இகழ்ந்து தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் தேசியத்தின் அடிப்படையைக் காவிக்கொண்டிருப்பவர்கள். இத்தகைய சின்னத்தனமான அரசியலை எக்காலத்திலும் செய்ய மாட்டோம்.” – என்றார்.
