புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி இன்னும் பேச்சுக்கள் இல்லை! – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு.
புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கும் இதுவரை எந்தவிதமான பேச்சுகளையும் முன்னெடுக்கவில்லை எனவும், தற்போது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாகவும், புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதாகவும் தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். அந்த நிலைப்பாட்டில் அரசு இன்றும் உறுதியாகவுள்ளது.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக, தற்போதைய பதவிக்காலத்துக்குள் புதிய அரசமைப்பு ஒன்று உருவாப்படுவதுடன், நாட்டு மக்களுக்கு அது குறித்த வாய்ப்புகளும் வழங்கப்படும்.
பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். ஆகவே, நிறைவடைந்த காலப்பகுதியில் பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமையளிக்கப்பட்டதுடன், ஜனநாயகத்தையும் சட்டவாட்சி கோட்பாட்டையும் உறுதிப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் ஜனாதிபதி முறைமை இரத்துச் செய்தல் தொடர்பில் கடந்த காலப்பகுதியில் ஆரம்பக்கட்ட பேச்சுகளைக் கூட முன்னெடுக்கவில்லை. அமைச்சரவையிலும் அது குறித்து ஆராயப்படவில்லை.
புதிய யாப்பு உருவாக்கம் என்பது நீண்ட, விரிவானதொரு செயற்பாடாகும். அத்தகைய பணிகளில் ஒட்டுமொத்த மக்களும் பங்கெடுக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் அது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும்.
அதற்குப் போதுமான கால அவகாசம் வழங்குவதுடன், அதனைத் தொடர்ந்து சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டியுள்ளது. பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு இத்தகைய பரந்துபட்ட பணிகளை உடனடியாக முன்னெடுக்க முடியாது.” – என்றார்.
