12 இலட்சம் ரூபாவுக்கு விட்ஸ் ரக கார் வாங்க நினைத்த மக்களுக்கு இன்று லீசிங் கட்ட முடியாமல் முகவர்களிடமிருந்து அடிவாங்கும் நிலை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை.
12 இலட்சம் ரூபாவுக்கு விட்ஸ் ரக கார் வாங்கும் கனவுடன் லீசிங் வசதியைப் பெற்று, தற்போதைய பொருளாதாரச் சுமை காரணமாகத் தவணைகளைச் செலுத்த முடியாமல் தவிக்கும் மக்களுக்கு, மீட்பு முகவர்கள் மூலம் நடுரோட்டில் அடிவாங்கும் நிலையம், வாகனங்களைப் பலவந்தமாகப் பறிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை வெளியிட்டார்.
லீசிங் மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடன் அல்லது லீசிங் தவணைகளைச் செலுத்தத் தவறினால், சட்டக் கட்டமைப்பினூடாக நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றுப் பணத்தை அறவிடச் சட்டங்கள் உள்ளன. அதனை விடுத்து, சட்டத்தை மீறி ‘கோணி பில்லா’ கொள்கையின் மூலம் பலவந்தமாகவும் வன்முறைகளைப் பிரயோகித்தும் சொத்துக்களைப் பறிக்கும் அநாகரிகச் செயற்பாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனங்கள் இவ்வாறு பலவந்தமாக முகவர்களைப் பயன்படுத்திச் சொத்துக்களைப் பறித்துச் செல்வதை மத்திய வங்கி முறைமைப்படுத்தவில்லை. மேலும், மக்கள் படும் சிரமங்களைப் புரிந்துகொள்ளாமல் பொலிஸாரும் இந்த முகவர்களின் பக்கத்தைச் சார்ந்து நிற்பது கண்டிக்கத்தக்கது.
கடன் பெற்றால் அதனை முறையாகச் செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தவணை செலுத்துவதில் சிக்கல் எழும்போது, கடன் இணக்கப்பாட்டை மீளமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அவற்றுக்கு இடமளிக்காமல் வாகனங்களை நடுரோட்டில் பறித்துச் செல்லும் கொள்ளைக்கார முகவர் முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.” – என்றார்.
