ரணிலின் ‘தலை’ குறிவைக்கப்பட்டதா? – சுயாதீன விசாரணை கோருகின்றார் ராஜித.
“இலங்கை – இந்திய அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்தவேளை, அணிவகுப்பு மரியாதையின் போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்றதொரு சம்பவம்தான் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற வளாகத்தில் இருந்தபோது நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-
“பாதுகாப்புப் பிரிவினர், ஊடகவியலாளர்களைத் தாக்குகின்றனர் என்பதே கடந்த காலங்களில் குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் தற்போது ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு செய்தால் அது பயங்கரவாதச் செயல் எனக் கூறப்பட்டது. எனவே, இந்த ஊடகவியலாளரின் செயலும் அவ்வாறுதான் உள்ளது. இலங்கை ஊடகத்துறைக்கு இந்தச் சம்பவம் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரி இலக்கு வைக்கப்பட்டாரா? அல்லது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வைக்கப்பட்ட இலக்கு தவறுதலாகப் பாதுகாப்பு அதிகாரி மீது பட்டதா? என்பது உட்பட அனைத்து விடயங்கள் பற்றியும் ஆராயப்பட வேண்டும்.
இந்தப் பாரதூரமான சம்பவத்தைப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஒரு சாதாரண சம்பவம் எனக் குறிப்பிடுவதை ஏற்க முடியாது.
நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகின்றது என்பதையே இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகின்றது.” – என்றார்.
