ஷிராந்தி கைது! – ராஜபக்க்ஷ குடும்பத்தில் அடுத்தடுத்து அதிரடி.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், கொழும்பு – கிருலப்பனை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதுக்கு முன்னதாக, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஷிராந்தி ராஜபக்ஷவின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் விரிவான வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அரச வங்கியொன்றிலிருந்து 10 மில்லியன் (100 இலட்சம்) ரூபா பணத்தைப் பெற்று அதனைத் தவறான முறையில் பயன்படுத்தியமை, ஊழல் புரிந்தமை மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷிராந்தி ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இயங்கிய ‘சிரிலிய சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய கொடுக்கல் – வாங்கல்கள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

முன்னாள் முதல் பெண்மணி ஒருவர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் தற்போது நாட்டின் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மஹிந்த – ஷிராந்தி தம்பதியின் மூத்த புதல்வன் நாமல் ராஜபக்ஷ எம்.பி. பிறிதொரு வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.