களுத்துறையில் கோர விபத்து! பல்கலைக்கழக மாணவன் பலி!!

களுத்துறை, வஸ்கடுவை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடத்தில் கல்வி பயிலும் சித்தும் சங்கல்ப (வயது 21) என்ற இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

5 பேர் அடங்கிய பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று மோட்டார் சைக்கிள்களில் காலி நோக்கிச் சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த மேற்படி மாணவனின் மோட்டார் சைக்கிள் வீதியின் வலதுபுறம் நோக்கி விலகியுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மாணவர், எதிரே வந்த பாடசாலை பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து காரணமாகக் காலி வீதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து பொலிஸார் விரைந்து செயற்பட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதி அருகில் உள்ள சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வஸ்கடுவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.