கறுப்பு ஜூலை திட்டமிட்ட சதி! – நீதியை நிலைநாட்ட என்.பி.பி. அரசாலேயே முடியும் என்று இளங்குமரன் எம்.பி. தெரிவிப்பு.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற இனக்கலவரம் என்பது தற்செயலாகத் தோன்றிய ஒன்றல்ல என்றும், அது அரசியல் இலாபத்துக்காகவும் இனங்களுக்கிடையே பிரிவினையைத் தூண்டுவதற்காகவும் அப்போதைய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதியாகும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கறுப்பு ஜூலை தொடர்பான செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“1983 கலவரத்துக்கு முன்னதாக 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவமே இந்தப் பேரழிவின் முதல்படியாகும். அன்றைய தினம் நூலகத்துடன் சேர்த்து தமிழ் மக்களின் ஜனநாயக வாக்குரிமையையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள்.

தமிழ் மக்கள் ஒருபோதும் ஒட்டுமொத்த சிங்கள மக்களால் பாதிக்கப்படவில்லை. கலவரத்தின்போது கொழும்பில் வசித்த பெரும்பாலான தமிழ் மக்களைச் சிங்களவர்களே தங்களது வீடுகளில் பாதுகாத்ததாகத் தெரிவித்தார். இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பிரிவினைவாதச் சதியே ஆகும்.

கடந்த 43 ஆண்டுகளாகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் எவரும் முழுமையான குரல் கொடுக்காத நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் இன்று தேசிய மக்கள் சக்தி அரசு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த ஆட்சியின் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வும் நீதியும் கிடைக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.