கறுப்பு ஜூலை விவகாரம்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு யோசனைக்கு ஆளும் தரப்பு எதிர்ப்பு!

கறுப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற யோசனைக்கு எதிர்ப்பைப் பதிவு செய்கின்றேன். ஏனெனில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவைக் காட்டிலும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது சிறந்ததாக அமையும். மக்கள் பிரதிநிதிகளின் பங்குப்பற்றலுடன் தெரிவுக்குழு ஒன்றை அமைத்தால் சிறந்த தீர்மானத்தை எடுக்கலாம். உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அது சிறந்ததாக அமையும்.”

– இவ்வாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த நாட்டில் யாரும் சிறுபான்மையினத்தவர்கள் அல்லர். இனத்தாலும் பிறப்பாலும் ஒருவரை சிறுபான்மை என்று குறிப்பிடுவது மனித குலத்துக்கு எதிரானது. இந்த நாட்டில் சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் கோபமும் வெறுப்பும் காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு வரலாற்று ரீதியிலான தவறுகள் பிரதான காரணமாகக் காணப்படுகின்றன.

1948.02.04 ஆம் திகதி சுதந்திரம் பெற்ற போது இனவாரி பிரதிநிதித்துவத்தில் காணப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படவில்லை. 1949 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, இலங்கையில் வாழ்ந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் நாடேற்றப்பட்டார்கள். அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் தாக்கம் இன்றும் தொடர்கின்றது.

1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவே சகல பிரச்சினைகளுக்கும் மூல காரணமாக அமைந்தது. 1957 ஆம் ஆண்டின் பண்டா – செல்வா ஒப்பந்தத்துடன் பிரதேச சபை ஊடாக அதிகாரப் பகிர்வு யோசனை முன்வைக்கப்பட்டது. இருப்பினும், அதற்கு சிங்களத் தேசியவாதம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அந்த ஒப்பந்தமும் புறக்கணிக்கப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற தவறுகளினால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது, யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் உருவானது. பல விளைவுகளும் இதனால் ஏற்பட்டன. இதுதான் இலங்கையின் கடந்த காலத்தின் ஒருசில வரலாற்றுச் சம்பவங்களாகும்.

இந்தக் கசப்பான காலத்தைக் கடந்து நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். இதுவொன்றும் இலகுவல்ல. நல்லிணக்கத்துக்கான உண்மையை கண்டறிய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 43 ஆண்டுகள் கடந்ததன் பின்னர் ஏதேனும் சம்பவம் தொடர்பில் சாட்சியங்களைத் திரட்டுவதில் உள்ள சட்டப் பிரச்சினைகளைச் சட்டத்தரணிகள் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்காகவே செல்வம் அடைக்கலநாதன் தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார். இதற்கு இணையாகப் பிறிதொரு யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்கள். இதற்கமைய நாடாளுமன்றச் செயற்குழு ஒன்றை நியமிக்க முடியும்.

நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படும் நாடாளுமன்றச் செயற்குழுவில் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவார்கள். பரிந்துரைகளை அனைவரும் ஒன்றிணைந்து தயாரிக்கலாம். சட்டங்களைத் திருத்தம் செய்ய ஒன்றிணைந்து செயற்படலாம். இதற்கமைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன். ஏனெனில், ஜனாதிபதி ஆணைக்குழுவைக் காட்டிலும் நாடாளுமன்றச் செயற்குழுவை அமைப்பது வெளிப்படைத்தன்மையானதாக அமையும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.