கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது: இந்திய உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கின்றார் ஜனாதிபதி அநுர.
“இலங்கையின் ஆள்புல எல்லை, வான் மற்றும் கடற்பரப்பை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்திய உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள விடயம் வரவேற்கத்தக்கது. பிளவுபடாத வெளிவிவகாரக் கொள்கையுடன் உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம்.”
– இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
குருநாகல் – நிக்கவரெட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ‘நமது அரசு: ஈராண்டு ஆட்சி – நாட்டுக்கு மாட்சி’ மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஈரான் கப்பல் விவகாரத்தில் நாங்கள் எடுத்த தீர்மானத்தை முழு உலகமும் வரவேற்றது. இலங்கையின் சுயாதீனம் மற்றும் இறையாண்மையை முன்னிலைப்படுத்தி ஈரான் கப்பல் விவகாரத்தில் தீர்மானம் எடுத்தோம்.
ஆசிய வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமானது. இலங்கையின் ஆள்புல எல்லை, வான் மற்றும் கடற்பரப்பை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகப் பயன்படுத்த எந்தத் தரப்புக்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

ஆட்சிக்கு வந்தவுடன் கச்சதீவைத் தமிழ்நாட்டுக்குச் சொந்தமாக்குவதாகத் தமிழக மாநிலத் தேர்தலின்போது முதலமைச்சர் வேட்பாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். எவருடனும் முரண்படத் தேவையில்லை. பிளவுபடாத, உறுதியான வெளிவிவகாரக் கொள்கையையே பின்பற்றுகின்றோம்.
இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது. நிறைவடைந்த இரண்டு ஆண்டுகாலப் பகுதியில் நாட்டில் எவ்வித இன முரண்பாடுகளும் இடம்பெறவில்லை. இதுவே எமது பாரிய வெற்றியாகும்.
கடந்த காலங்களில் சிங்கள அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வருவதற்காக இன முரண்பாட்டை ஏற்படுத்தினார்கள். தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் மோதவிட்டார்கள். அதனூடாக நாடாளுமன்றத்துக்கு வந்தார்கள். ஆனால், அவர்கள் நாடாளுமன்றத்தில் முரண்பட்டுக் கொள்ளவில்லை.
30 வருடகால யுத்தம் இந்த நாட்டில் பாரியதொரு இழப்பை ஏற்படுத்தியது. யுத்தத்தால் எழுந்த கேள்விகளுக்கு இன்றளவில் பதில் கிடைக்கவில்லை. ஆகவே, இன முரண்பாடு இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவது மாபெரும் வெற்றியாகும். அந்த இலக்கை நிச்சயம் அடைவோம்.” – என்றார்.
