76 ஆண்டுகளாக நடந்தது ‘திருடன் – பொலிஸ்’ நாடகம் – தற்போதுதான் நாட்டுக்கு உண்மையான பொலிஸார் வந்துள்ளனர் என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காத, வீண்விரயம் செய்யாத தூய்மையான அரசு உருவாகியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
குருநாகல் – நிக்கவரெட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ‘நமது அரசு: ஈராண்டு ஆட்சி – நாட்டுக்கு மாட்சி’ மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகத் தமது அரசு முன்னெடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்தும், நாட்டின் அரசியல் வரலாறு குறித்தும் ‘திருடன் – பொலிஸ்’ விளையாட்டை உதாரணமாகக் கூறி அவர் எளிய முறையில் விளக்கினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சிறுவயதில் விளையாடும் ‘திருடன் – பொலிஸ்’ விளையாட்டில் தினமும் கதாபாத்திரங்கள் மாறுவது போல, கடந்த 76 ஆண்டுகளாக இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்தவர்களால் நாடகத்தனமான ஆட்சியே நடத்தப்பட்டு வந்தது. ஒரு நாளில் பொலிஸாக இருந்தவர் அடுத்த நாள் திருடனாக மாறுவதைப் போல நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
தற்போதுதான் நாட்டுக்கு உண்மையான பொலிஸார் வந்துள்ளனர். ஊழல்வாதிகளும் திருடர்களும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுப் பிடிபடுகின்றனர்.
ஓர் ஊழல்வாதியால் மற்றொரு ஊழல்வாதியைத் தண்டிக்க முடியாது. ஆனால், தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசால் மட்டுமே ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர முடியும்.” – என்றார்.
