ஷிராந்திக்குப் பிணை! – மருத்துவ அறிக்கையை பரிசீலித்து மன்று உத்தரவு.

‘சிரிலிய சவிய’ நிதியப் பண முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்படி, தலா ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையினால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் உள்ள விசேட விடயங்களைப் பரிசீலித்தே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது, ஷிராந்தி ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, அவரது இதயத்தின் இடது பிரதான தமனியில் 80 முதல் 90 சதவீத அடைப்பு காணப்படுகின்றது என்றும், அவசரமாக இதயப் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸின் சமர்ப்பணங்களும் பரிசீலிக்கப்பட்டு, பிணைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவற்றுடன், இவ்வ வழக்கில் முதலாவது சந்தேகநபரான பிரதீப் காரியவசம் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் இயந்திரம் வழங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 100 இலட்சம் ரூபா பெறப்பட்டு அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.