டெல்லி போராட்டம்: மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை கோரும் ஐ.நா.!

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக இளைஞர்களும், மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த 3 மாதமாக நடைபெற்ற இந்த போராட்டங்களின்போது போலீசார் கடுமையான அடக்குமுறையைக் கையாண்டதாக ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கூட்டாக கவலை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜெனிவாவில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் அமைதியான முறையில் போராட மக்களுக்கு உள்ள உரிமையை அரசு மதிக்க வேண்டும். தடியடி நடத்துவது, போராட்டத்தை ஒடுக்குவது, கைது நடவடிக்கைகள் மற்றும் இணைய சேவை முடக்கம் போன்ற நடவடிக்கைகள் கவலையளிக்கின்றன.

டெல்லியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் இளைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உடனடியாக நியாயமான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.