மின்னல் தாக்கி இரு பெண்கள் பரிதாப மரணம்.

அனுராதபுரம், மதவாச்சி – ரம்பேவை பகுதியில் மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளமையுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரம்பேவை, வெலியோ சந்தைப் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் விவசாய வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உறவினர்களான மூன்று பெண்கள், திடீரெனப் பெய்த மழை காரணமாக அருகில் இருந்த மரத்தின் அடியில் ஒதுங்கியுள்ளனர். இதன்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மின்னல் தாக்கியுள்ளது.

மின்னல் தாக்கத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு ரம்பேவை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் 61 மற்றும் 26 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மற்றைய பெண் மேலதிக தீவிர சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.