திருவனந்தபுரம் அருகே நிலச்சரிவு: பிலாஸ்பூர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து!

திருவனந்தபுரம்: தெற்கு கேரள மாவட்டமான திருவனந்தபுரத்தில் உள்ள பாறைசாலை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் தடம் புரண்டதால், நெய்யாற்றின்கரை-பாறைசாலை வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் என்ஜின் தடம் புரண்டதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

நிலச்சரிவைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலை 2.19 மணிக்கு பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் பாறசாலை அருகே நிறுத்தப்பட்டது.

அந்த இடத்தில் ரயில் நின்ற பிறகு, ரயில் என்ஜின் தடம் புரண்ட நிலையில் காணப்பட்டதாகவும், நல்வாய்ப்பாக “அனைத்துப் பயணிகளும் ரயில்வே ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்,” என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் நெய்யாற்றின்கரை-பாறைசாலை அருகே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து திருநெல்வேலி வரையிலான ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டது. பயணிகளை அழைத்துச் செல்வதற்கு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மேலும், ரயிலை இயக்குவதற்காக ஒரு மாற்று என்ஜின் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்காக, மீட்பு பணியாளர்கள் மற்றும் விபத்து நிவாரண ரயில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தாம்பரம்-திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்பெஷல் ஏரணியிலும், மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் வடக்கு பணகுடியிலும், தாம்பரம்-திருவனந்தபுரம் சென்ட்ரல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நாங்குநேரியிலும் நிறுத்தப்பட்டன.

மேலும், கன்னியகுமரி-மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் சந்திப்பு-புனலூர் பயணிகள் ரயில், திருவனந்தபுரம் வடக்கு-நாகர்கோவில் சந்திப்பு பயணிகள் ரயில், புனலூர்-கன்னியகுமரி பயணிகள் ரயில் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து ரயில்களின் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவைதவிர, குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் புணே-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகியவையும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், நிலச்சரிவு, ரயில் என்ஜின் தடம் புரண்டதால் நாகர்கோயில்-திருவனந்தபுரம், கொல்லம் இடையே ஆறு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. மேலும் பணிகள் முடியும் வரை அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம் பகுதியில் பெய்து கொண்டிருக்கும் கனமழைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு புதன்கிழமை மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. அக்டோபர் 22 முதல் அக்டோபர் 25 வரை கனமழை பெய்யக்கூடும் என கணித்து மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.