சபாநாயகர் தவறிழைத்திருந்தால் கட்சியே அவரை நீக்கியிருக்கும்! – எதிர்க்கட்சியினருக்குத் தேசிய மக்கள் சக்தி சாட்டையடி.
சபாநாயகர் தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் வரை காத்திருக்காமல், ஆளுங்கட்சியே நிச்சயமாக நடவடிக்கை எடுத்திருக்கும்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆராச்சி தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கென உரிய நடைமுறைகள் உள்ளன. ஆனால், அந்த நடைமுறைகள்கூட நாட்டின் எதிர்க்கட்சியினருக்குத் தெரியவில்லை என்பது கவலையளிக்கின்றது. பாடசாலைகளில் நடைபெறும் மாதிரி நாடாளுமன்ற அமர்வுகளில்கூட மாணவர்கள் பிரேரணைகளை மிகச் சிறப்பாக முன்வைக்கின்றனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஏதேதோ காரணங்களைக் கூறுகின்றனர். குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை முறையாகவும் தெளிவாகவும் முன்வைக்க வேண்டும். அதைவிடுத்து, தகாத வார்த்தைகளைக் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கக் கூடாது.
முறையான வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால், அதனை விவாதிப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.
அதேபோன்று, சபாநாயகர் தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே எமது கட்சி அவரைப் பதவியிலிருந்து நீக்கியிருக்கும். ஆனால், சபாநாயகர் எந்தவொரு தவறும் இழைக்கவில்லை.” – என்றார்.
