தமிழகத்துக்குக் காவிரி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்திற்குக் காவிரியில் இருந்து அடுத்த 15 நாள்களுக்கு நாள்தோறும் 3,000 கனஅடி நீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பகிர்வு விவகாரம் தொடர்பாக டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 61வது கூட்டம், அந்த ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் சனிக்கிழமை (நவம்பர் 6) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகத்திற்குக் காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் அடுத்த 15 நாள்களுக்கு தொடர்ந்து நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.

இதனை ஏற்றுக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், கர்நாடக அரசுக்கு உடனடியாக நீர் திறக்க உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னதாக, கடந்த அக்டோபர் 23ம் தேதி முதல் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததால் தமிழகத்தில் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வழக்கறிஞர் பி.கருணாகரன் தெரிவித்தார்.

இதனால் நான்கு லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு தொடர்ந்து தண்ணீர் கிடைக்காத நிலையில் தமிழக விவசாயிகள் என்னதான் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

ஏற்கெனவே காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட அளவின்படி கர்நாடக அரசு முழுமையாக நீரைத் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் சூழலில், இந்தப் புதிய உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.