2.9 கிலோ எடையுள்ள மூளைக்கட்டி அகற்றம்: மேற்குவங்க எய்ம்ஸ் மருத்துவமனையின் வரலாற்றுச் சாதனை!
மேற்குவங்கத்தில் உள்ள கல்யாணி ஏய்ம்ஸ் மருத்துவமனையில், 2.9 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய மூளைக்கட்டியை அறுவைசிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
2.9 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய மூளைக்கட்டி
இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த 26 வயதான சோனாய் மொண்டல் (Sonai Mondal) என்பவருக்கு தலையில் பெரிய கட்டி ஒன்று உருவாகியுள்ளது.
சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்ற போதும், ஆபத்து காரணமாக பல்வேறு மருத்துமனைகள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டன.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 15, 2026 அன்று, மேற்குவங்கத்தில் உள்ள கல்யாணி ஏய்ம்ஸ் (AIIMS kalyani) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில், அந்த கட்டியின் அளவு சுமார் 2.9 கிலோ எடை, 45 செ.மீ × 42 செ.மீ × 32 செ.மீ ஆகவும், சுற்றளவு 66 செ.மீ ஆகவும் இருந்தது தெரியவந்தது. மேலும், அது வீரியம் மிக்க புற நரம்பு உறை கட்டி (MPNST) என கண்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரிவுகளுடன் இணைந்து, 2 கட்ட அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
மண்டையோட்டிற்குள் ஊடுருவி மூளையின் இடது பக்க சுவர்-பிடரிப் பகுதிக்குள்ளும், முக்கிய சிரை நாளங்களிலும் ஊடுருவியிருந்ததால், இந்த அறுவை சிகிச்சை மிகவும் சவாலானதாக இருந்தது.
செப்டம்பர் 15 அன்று 5 மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்த முதல் அறுவை சிகிச்சையின் போது, கட்டியின் வெளிப்புறப் பகுதியை அகற்றும் போது, விரிவடைந்த மற்றும் வளைந்த சிரை நாளங்களிலிருந்து ஏற்பட்ட கட்டுக்கடங்காத மொத்த இரத்த இழப்பு சுமார் 9.5 லிட்டராக இருந்தது. இதனால், அவசரமாக அதிக அளவு இரத்தம் செலுத்த வேண்டியிருந்தது.
மண்டையோட்டின் பாதிக்கப்பட்ட பகுதியைச் சீரமைப்பதற்காக, டைட்டானியம் வலை மண்டையோட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சை அக்டோபர் 14 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு மொத்தம் 18 யூனிட் இரத்த அணுக்கள் அல்லது செறிவூட்டப்பட்ட சிவப்பு இரத்த அணுக்கள் (PRBC) வழங்கப்பட்டதாக கல்யாணி-எய்ம்ஸ் தெரிவித்தது. மேலும், அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் கூடுதலாக 8 யூனிட் PRBC மற்றும் பிற இரத்தக் கூறுகள் வழங்கப்பட்டன.
தற்போது அந்த இளைஞர் சுயமாக நடக்கும் நிலையிலும், மருத்துமனையிலிருந்து வீடு திரும்பும் நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்யாணி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஷஸ்வத், இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய மூளைக் கட்டி என்று கூறினார்.
