மாலையில் வயல் காவலுக்குச் சென்ற குடும்பஸ்தர் மறுநாள் காலையில் சடலமாக மீட்பு! – அம்பாறையில் சோகம்.
“வயல் காவலுக்காகச் செல்ல வேண்டும், உணவைக் கட்டி வையுங்கள்” என்று தாயாரிடம் சொல்லிவிட்டு மாலையில் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பஸ்தர் ஒருவர், மறுநாள் காலையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சோகச் சம்பவம் அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கோமாரி பகுதியைச் சேர்ந்த யோகராசா மதன் (34 வயது) எனும் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
மட்டக்களப்பு – அம்பிளாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கோமாரி பகுதியில் திருமணம் முடித்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் குழந்தை ஒன்று உள்ளமையுடன், இவரது மனைவி பணி நிமித்தம் வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளார்.
மேற்படி நபர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை வேளையில் தனது தாயாரிடம், “வயல் காவலுக்காகச் செல்ல வேண்டும், இரவு உணவைக் கட்டி வையுங்கள்” எனக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எனினும், அவர் இரவு வேளையில் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மறுநாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை வேளையில் கோமாரி – கழுகொல்லை எனும் பகுதியில் அவர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டுப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்த பொத்துவில் பொலிஸார் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எவ்வாறு மரணமடைந்தார் அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவல்களும் வெளியாகாத நிலையில், இந்த மரணம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



