இரு பகுதிகளில் கோர விபத்து: பெண் உட்பட இருவர் மரணம்!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இருவேறு மோட்டார் சைக்கிள் விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி, சங்கராஜ மாவத்தையில் நேற்றுக் காலை தென்னேகும்புர திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சறுக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும் பின்னால் பயணித்த பெண்ணும் உடனடியாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பின்னால் பயணித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இதேவேளை, பாணந்துறை, கிம்பத மாவத்தையில் நேற்று இரவு திக்கள திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் கை வண்டியைத் தள்ளிச் சென்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மேற்படி நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும் காயமடைந்து சிகிச்சைக்காகப் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி இரண்டு விபத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பிரதேச பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.