வலி. வடக்கு காணிகளை விடுவிப்பது குறித்து இன்று உயர்மட்டக் கள ஆய்வு! – பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தலைமையிலான குழு பலாலி விஜயம்.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் படையினர் வசமுள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை பலாலிக்கு வருகை தரவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளிலிருந்து ஒரு தொகுதி நிலங்களை மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பில் கள ஆய்வு நடத்துவதற்காகவே இவர்களின் இந்த விசேட விஜயம் இடம்பெறுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விசேட விமானம் மூலம் இன்று காலை பலாலி விமான நிலையத்துக்கு வருகை தரும் இம்மூவரும், இன்று மாலை வரை அங்கு தங்கியிருந்து படையினர் வசமுள்ள பகுதிகள் மற்றும் விடுவிக்கப்படக்கூடிய காணிகள் தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளனர்.

இன்றைய இந்த உயர்மட்ட கள ஆய்வையடுத்து, மிக விரைவில் வலிகாமம் வடக்கிலிருந்து ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.